உளுந்தூர்பேட்டையில் தனியார் பள்ளி பேருந்துகள் தீவிர ஆய்வு. பாதுகாப்பு உபகரணங்கள், சிசிடிவி, அவசரகால வழிகள் உள்ளிட்டவை அதிகாரிகள் நேரில் சோதனை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 May 2026

உளுந்தூர்பேட்டையில் தனியார் பள்ளி பேருந்துகள் தீவிர ஆய்வு. பாதுகாப்பு உபகரணங்கள், சிசிடிவி, அவசரகால வழிகள் உள்ளிட்டவை அதிகாரிகள் நேரில் சோதனை.

 


 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி வேன்களின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.


திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ஆனந்தகுமார் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை நேரில் பரிசோதனை செய்தனர். பள்ளி பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளனவா, வேக கட்டுப்பாட்டு கருவிகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் தீயணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்பதனை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர்.


மேலும் பேருந்துகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கத்தையும் வழங்கினர். பேருந்து ஓட்டுநர்களின் செயல்பாடு, வாகன ஆவணங்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய தேவையான நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.


அதேபோல், அவசரகால வெளியேறும் வழிகள் முறையாக செயல்படுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்தனர்.


இந்த ஆய்வின்போது மாவட்ட துணை ஆட்சியர், பள்ளி பேருந்து ஓட்டுநர்களிடம் உடல்நல பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களை ஏற்றி செல்லும் போது அவர்கள் கை, தலை, கால்களை வாகனத்தின் வெளியே நீட்டாதவாறு கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி அசோகன், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad